இந்தோனேசியாவில் காட்டுத்தீ: அண்டை நாடுகளுக்கும் பரவும் புகை மூட்டம்

இந்தோனேசியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகப் போராடி வரும் நிலையில், அதன் புகை மூட்டம் அண்டை நாடுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது.

நாடு முழுவதும் 1,07,000 ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பு காட்டுத்தீயால் எரிந்து சாம்பலாகியுள்ளது. தீவிரமடைந்துள்ள எல் நினோ (El Niño) பருவநிலை மாற்றத்தால் வெப்பம் அதிகரித்து வறட்சி நீடித்து வருகிறது.

ரியாவு, ஜாம்பி, தெற்கு சுமாத்ரா, மேற்கு கலிமந்தான், மத்திய கலிமந்தான் மற்றும் தெற்கு கலிமந்தான் ஆகிய 6 மாகாணங்களில் தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கிழக்கு ஜாவாவில் உள்ள மவுண்ட் புரோமோ தேசியப் பூங்காவில் 550 ஹெக்டேர் நிலப்பரப்பு தீக்கிரையானது.

அடர்ந்த புகையால் மக்களின் கண்களில் எரிச்சல் ஏற்பட்டுள்ளதுடன் பார்வைத்திறனும் குறைந்துள்ளது. மேற்கு கலிமந்தானில் உள்ள பொந்தியானாக் நகரில் பள்ளிகளுக்கு நேரில் செல்லத் தடை விதிக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

 இந்த அடர் புகை அண்டை நாடான மலேசியாவிற்கும் பரவியுள்ளது. சரவாக் மாநிலத்தில் உள்ள செரியன் போன்ற நகரங்களில் காற்றின் தரக் குறியீடு (API) 190-ஐத் தாண்டி "ஆரோக்கியமற்ற" நிலையை அடைந்துள்ளது.

 செயற்கை மழை பொழிய வைக்கும் வகையில் விமானங்கள் மூலம் மேகங்களில் உப்புத்தூள் தூவும் (cloud-seeding) பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான வீரர்கள் களத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Bootstrap