கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு 222 பயணிகள், 7 விமான ஊழியர்கள் என 229 பேருடன் இண்டிகோ நிறுவனத்தின் 6இ-723 விமானம் வந்து கொண்டிருந்தது. விமானம் தரையிறக்க விமானி தயாரானபோது இடதுபுற என்ஜின் செயலிழந்திருப்பதை கண்டறிந்தார். அதனால் விமானத்தை தொடர்ந்து வானிலேயே வட்டமடிக்க முடிவு செய்து, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். விமானம் உடனடியாக தரை இறங்கவும் அனுமதி வழங்கப்பட்டது. எந்தவிதமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில், விமான நிலையத்தில் அனைத்து பிரிவு மீட்பு மற்றும் அவசர பணி ஊழியர்களும் தயார் நிலையில் இருந்தனர்.
விமானம் நேற்றிரவு 11.20 மணிக்கு தரையிறங்கியிருக்க வேண்டும் கிட்டத்தட்ட 40 நிமிடம் வட்டமடித்த பிறகே, நள்ளிரவு 12 மணியளவில் விமானம் தரையிறங்கியது. இதனால் ஏர்போர்ட்டில் பரபரப்பான சூழல் நிலவியது. விமானத்தில் பயணித்த அனைவரும் பத்திரமாக இறங்கிய பிறகு விமான இன்ஜினியர் குழுவினர் விமானத்தில் ஏறி சோதித்தனர்.
விமானத்தின் என்ஜின் கோளாறுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விமானத்தில் என் ஜின் கோளாறு காரணமாக அவசர நிலை அறிவிக்கப்பட்டு விமானம் தரையிறக்கப்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது.