முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சொந்தமான கால்டன் இல்லம் கைமாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வளையொளி தளமொன்றில் நடந்த அரசியல் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ச எம்.பி இதனை தெரிவித்துள்ளார். அதில் தொடருந்து கருத்து தெரிவித்த அவர், எனக்கு 23 வயது முடிந்து 24 வயதாகும் போது நான் நாடாளுமன்றத்திற்கு வந்துவிட்டேன்.அன்று முதல் இன்று வரை நேர்த்தியாக சொத்து விபரங்களை சமர்ப்பித்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் நானும் ஒருவன்.
அதாவது இந்தச் சட்டங்கள் வருவதற்கு முன்பே சமர்ப்பித்துள்ளேன்.எனக்கு சொந்தமான பெரும்பான்மையான காணிகள் பெற்றோர் மற்றும் குடும்பத்தாரிடமிருந்து கிடைத்தவை.
ஏனெனில் சிலர் ராஜபக்சக்கள் காணிகள் எதுவும் இல்லாத ஏழைகள் என்கின்றனர்.நாங்கள் ஒரு அரசியல் குடும்பத்திலிருந்து வந்த பரம்பரை. எனவே பெற்றோரிடமிருந்து கிடைத்த சில சொத்துக்கள் உள்ளன.
அதேபோல் நான் ஒரு காலத்தில் ஒரு ஆலோசனைக் நிறுவனம் ஒன்றை (Consultancy firm) நடத்தினேன். அதைத் தொடங்கிய விதம் மற்றும் அதற்கு வருமானம் ஈட்டிய விதம்- வரிக் கணக்குகள் (Tax reports) உட்பட அனைத்தையும் நான் ஒவ்வொரு வருடமும் சொத்து விபரப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
மேலும் அது குறித்து இப்போது இரண்டு அரசாங்கங்களால் சுமார் 7 முதல் 10 வருடங்களாக அதாவது நல்லாட்சி அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கம் என 2015 முதல் 2020 வரை. மீண்டும் 2025 முதல் இன்று வரையிலும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
எனவே அந்த அனைத்து விடயங்கள் குறித்தும் நான் குறிப்பிட்டுள்ளேன். மேலும் அந்த வருமானம் கிடைத்த விதம் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளேன். அத்தோடு நான் பெரும் வர்த்தக குடும்பத்திலே திருமணம் செய்து கொண்டேன்.
மனைவியின் சொத்துக்கள் நான் சம்பாதித்தவை அல்ல. மனைவியின் குடும்பத்திலிருந்து அவருக்குக் கிடைத்தவை. மேலும் அவர்கள் இலங்கையில் சுற்றுலாத் துறையில் இன்றும் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கிறார்கள். இப்போது அடுத்த சொத்து விபரங்கள் அறிக்கையில் நிச்சயமாகத் தங்காலை வீடும் அதில் சேர்க்கப்படும். ஏனென்றால் அப்பா அதை எனக்குக் கொடுத்து விட்டார்.கடந்த வாரமே எழுதப்பட்டது. அரசியல் இல்லம் என்பதால் அதை எனக்கு முன்பே தர முயன்றபோது நான் வேண்டாம் அப்பாவிடமே இருக்கட்டும் என்று கூறினேன். ஏனென்றால் ஆயுட்கால உரிமையை வைத்துக்கொண்டு பிள்ளைகளுக்குச் சொத்துக்களை எழுத வேண்டும் என்று நம்பும் ஒருவன் நான்.
ஆனால் அப்பா மறுபடியும் வலியுறுத்தி இது அரசியல் இல்லம் என்பதாலும் தொடர்ந்து அரசியலுக்காகப் பயன்படுத்தப்படுவதாலும் நிச்சயமாகத் உனக்கு தரப்பட வேண்டும் என்று கூறினார். அதனாலே தங்காலை கால்டன் இல்லம் எனக்கு வழங்கப்பட்டமைக்கான காரணமாகும் என குறிப்பிட்டுள்ளார்.