பிரபல கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo), தனது நீண்ட கால தோழியும் மாடலுமான ஜார்ஜினா ரோட்ரிகஸை (Georgina Rodríguez) போர்த்துகீசிய வழக்கப்படி பதிவுத் திருமணம் (Civil Ceremony) செய்துகொண்டார்.
ஆகஸ்ட் 11 அன்று போர்த்துகீசிய கடலோர நகரமான காஸ்காய்ஸில் (Cascais) நடைபெற்ற இந்த ரகசியத் திருமணத்தில் இவர்களது ஐந்து குழந்தைகளும் கலந்துகொண்டனர். இருவரும் திருமண மோதிரம் அணிந்திருக்கும் புகைப்படத்தை ரொனால்டோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு வெளியான 30 நிமிடங்களிலேயே 30 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றது.
2016-இல் மாட்ரிட்டில் உள்ள குச்சி (Gucci) கடையில் ஜார்ஜினா பணிபுரிந்தபோது இருவருக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11 அன்று தங்களது நிச்சயதார்த்தத்தை இவர்கள் முறைப்படி அறிவித்தனர்.
இத்தம்பதியினருக்கு அலானா மார்டினா மற்றும் பெல்லா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ரொனால்டோவின் மற்ற மூன்று குழந்தைகளையும் ஜார்ஜினாவே வளர்த்து வருகிறார். இவர்கள் தற்போது சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் வசித்து வருகின்றனர்.
41 வயதான ரொனால்டோ ஐந்து முறை 'பாலோன் டி ஓர்' (Ballon d'Or) விருதை வென்றுள்ளார். தற்போது சவுதி அரேபியாவின் அல் நஸ்ர் (Al Nassr) கிளப் அணிக்காக விளையாடி வரும் இவர், 2027 வரை அவ்வணியில் தொடர ஒப்பந்தம் செய்துள்ளார்.