பிரிட்டனில் இயங்கும் 'ரேடியோ கரோலின்' (Radio Caroline) என்ற சமூக வானொலி நிலையம், சார்லஸ் மன்னர் இறந்துவிட்டதாகத் தவறான செய்தியை நேரலையில் ஒளிபரப்பியதன் மூலம் ஒளிபரப்பு விதியை மீறியுள்ளதாக பிரிட்டனின் ஊடகக் கண்காணிப்பு அமைப்பான 'ஆஃப்காம்' (Ofcom) தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம், வானொலி ஸ்டுடியோ கணினியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டிருந்த ஊழியர் ஒருவர், ஆர்வம் காரணமாக (out of curiosity) மன்னர் இறந்தால் ஒளிபரப்புவதற்காக முன்கூட்டியே பதிவு செய்து வைக்கப்பட்டிருந்த ஒலிப்பதிவுக் கோப்புகளை இயக்கினார்.
அந்த ஒலிப்பதிவு நேரலையில் ஒளிபரப்பாவதை உணர்ந்ததும், பீதியடைந்த அந்த ஊழியர் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடினார்.
"சார்லஸ் மன்னரின் மறைவையடுத்து வழக்கமான நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றன" என்ற அறிவிப்பும், அதைத் தொடர்ந்து தேசிய கீதமும், பின்னர் 16 நிமிடங்கள் அமைதியும் நேரலையில் ஒளிபரப்பானது.
தொலைதூரத்தில் இருந்து வழக்கமான நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தத் தொகுப்பாளர், இந்தத் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க 30 நிமிடங்கள் ஆகியுள்ளது. செய்திகளில் துல்லியம் இருக்க வேண்டும் என்ற விதியையும், தவறுகளை உடனுக்குடன் திருத்த வேண்டும் என்ற விதியையும் மீறியதாகக் கூறி ஆஃப்காம் அமைப்பு இந்நிலையத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.
தவறு செய்த ஊழியர் எச்சரிக்கப்பட்டு மன்னிப்பு கோரியுள்ளார். மேலும், அந்த ஒலிப்பதிவுக் கோப்புகள் கணினியிலிருந்து அகற்றப்பட்டுள்ளன.