பசிபிக் பெருங்கடலில் அணு ஆயுத சோதனை: சீனாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த அவுஸ்திரேலியா

சீனாவின் அணு ஆயுத ஏவுகணை சோதனையைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அணு ஆயுத ஏவுகணை சோதனைக்குப் பிறகு, சீனாவிற்கு அவுஸ்திரேலியா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஜூலை மாதம் அவுஸ்திரேலியா ஃபிஜியுடன் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

அதனைத் தொடர்ந்து, சில மணி நேரங்களில் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து அப்பகுதிக்குள் அணு ஆயுத ஏவுகணை ஏவப்பட்டதை சீனா உறுதி செய்தது. குறித்த ஏவுகணை துவாலு அருகே தரையிறங்கியதாக நம்பப்படுகிறது.

இந்த ஏவுகணை சோதனை தொடர்பாக சர்வதேச அளவில் சீனா கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

மேலும், அமெரிக்க வெளியுறவுத் துறையால் வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் குறித்து பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு குறைந்தது 24 மணி நேரமாவது முன்னறிவிப்பு வழங்க 'சம்பந்தப்பட்ட அனைத்து நாடுகளும்' உறுதியளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தென் பசிபிக் பகுதியில் சீனா நடத்திய சோதனை ஏவுதலைத் தொடர்ந்து, ஏவுகணை ஏவுதல்கள் குறித்து முன்கூட்டியே அறிவிப்பு வழங்க வேண்டும் என்ற அமெரிக்காவின் அழைப்பில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் அவுஸ்திரேலியாவும் இணைந்துள்ளது.

சீனாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலான அறிக்கையில், 'பசிபிக் பகுதியில் சமீபத்தில் நடந்த ஏவுகணை சோதனை நடவடிக்கைகள், ஏவுகணை ஏவுதல்கள் குறித்து அறிவிப்பதற்கும் மோதல் தவிர்ப்பதற்கும் பெரும்பாலான நாடுகள் பின்பற்றும் வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றவில்லை.

போதுமான முன் அறிவிப்பு மற்றும் விவரங்கள் இல்லாமல் அணு ஆயுதத் திறன் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை நடத்துவது ஆபத்தானது மற்றும் இந்த சோதனைகளுக்கு அருகிலுள்ள தொடர்புடைய நாடுகளின் அமைதி மற்றும் பாதுகாப்பைக் குலைக்கிறது' என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Bootstrap