தென் கொரிய கால்பந்து சம்மேளனம் (KFA) வெளிநாட்டு நடுவர்களுக்குப் பாலியல் லஞ்சம் (Sexual favours) கொடுத்ததாக எழுந்த புகார்கள் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளுக்குப் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளது.
2016-ஆம் ஆண்டு கலாச்சார, விளையாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சகத்தால் தொகுக்கப்பட்ட அறிக்கை ஒன்று JTBC ஊடகம் மூலம் வெளியானது. 2010-களின் தொடக்கத்தில், 2014 உலகக்கோப்பை மற்றும் 2012 லண்டன் ஒலிம்பிக் தகுதிப்போட்டிகளில் பங்கேற்ற வெளிநாட்டு நடுவர்களுக்கு மசாஜ் நிலையங்களில் பாலியல் உபசரிப்பு அளிக்க KFA கடன் அட்டைகளைப் பயன்படுத்தி 5.6 மில்லியன் வோன் (£2,927) செலவழிக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் செலவுகள் உணவு, பானங்கள் மற்றும் மசாஜ் சேவைக்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி ஊழியர்கள் பொய் கணக்கு காட்டியுள்ளனர். இந்தச் சம்பவங்களுக்கு மன்னிப்பு கோரிய KFA, இவை 10 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றவை என்றும், தற்போது தங்களது சம்மேளனத்தில் கடன் அட்டைகளைத் தவறாகப் பயன்படுத்துவது போன்ற தவறான நடத்தைகள் எதுவும் நடக்கவில்லை என்றும் உறுதியளித்துள்ளது.
2026 உலகக்கோப்பையில் தென் கொரிய அணி அடைந்த மோசமான தோல்வியைத் தொடர்ந்து எழுந்த பொதுமக்கள் கொந்தளிப்பால், பயிற்சியாளர் ஹாங் மியுங்-போ (Hong Myung-bo) மற்றும் KFA தலைவர் சுங் மோங்-க்யூ (Chung Mong-gyu) ஆகிய இருவரும் ஏற்கனவே தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
பயிற்சியாளர் நியமனத்தில் நடைபெற்ற குளறுபடிகள் தொடர்பாக KFA தலைமையகத்தில் போலிஸார் சோதனை நடத்திய நிலையில், இந்த லஞ்சப் புகாரையும் விசாரிப்பது குறித்து போலிஸார் பரிசீலித்து வருகின்றனர்.