காசாவில் போர் தொடங்குவதற்கு முன்பு இருந்ததை விட, தற்போது புற்றுநோயாளிகளின் இறப்பு விகிதம் இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிகரித்துள்ளதாக உள்ளூர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காசாவில் இருந்த ஒரே சிறப்பு புற்றுநோய் மருத்துவமனை கடந்த ஆண்டு இஸ்ரேல் ராணுவத்தால் இடிக்கப்பட்டது. இதனால், அங்குள்ள சுமார் 17,000 புற்றுநோயாளிகளுக்கு கீமோதெரபி அல்லது பிற மேம்பட்ட சிகிச்சைகள் பெற வழியில்லாமல் போயுள்ளது.
உள்ளூரில் சிகிச்சை வசதிகள் இல்லாத நிலையில், மேல் சிகிச்சைக்காக எகிப்து அல்லது பிற நாடுகளுக்குச் செல்ல முயலும் நோயாளிகளுக்கு இஸ்ரேல் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள இஸ்ரேலின் COGAT அமைப்பு, மருத்துவ உதவிக்காக வெளியேறுபவர்களைத் தடுப்பதில்லை என்றும், நோயாளி செல்லவிருக்கும் நாட்டின் அதிகாரப்பூர்வ கோரிக்கை மற்றும் பாதுகாப்பு சோதனைகளுக்கு பிறகே அனுமதி வழங்கப்படுவதாகவும் கூறியுள்ளது.
போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகும், சிகிச்சைக்காகப் பதிவு செய்துள்ள சுமார் 20,000 பேரில் 5,000 புற்றுநோயாளிகள் இன்னும் காசாவை விட்டு வெளியேற அனுமதி கிடைக்காமல் காத்திருக்கின்றனர்.
பெரும்பாலான மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளதோடு, புற்றுநோயைக் கண்டறியும் மற்றும் சிகிச்சைக்கான அத்தியாவசிய மருத்துவப் பொருட்களுக்கு 70% வரை தட்டுப்பாடு நிலவுகிறது.