பிரபல கொரிய இசைக்குழுவான பிடிஎஸ் (BTS)-ன் உறுப்பினர் V (கிம் டே-ஹியுங் - Kim Tae-hyung), தனது ஒரு காதில் கேட்கும் திறன் குறைந்துள்ளதாகவும், அதற்காக அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அண்மையில் நடந்த நேரலை (Livestream) உரையாடலில் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்த பிரச்சனையால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக 30 வயதான V தெரிவித்துள்ளார். "எனது இடது காதின் கேட்கும் திறன் 100% என்றால், வலது காதில் சுமார் 30% மட்டுமே கேட்கிறது" என்று அவர் கூறினார்.
தென் கொரியாவில் கட்டாய இராணுவ சேவையில் (2023 முதல் ஜூன் 2025 வரை) இருந்தபோது இந்த பிரச்சனை தீவிரமடைந்ததாகக் கூறிய அவர், ஆரம்பத்தில் இதை மன உறுதியால் கடந்துவிடலாம் என நினைத்து பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை என தெரிவித்தார்.
தற்போது தவறாமல் மருத்துவமனைக்குச் சென்று வழக்கமான சிகிச்சைகளையும் மருந்துகளையும் எடுத்து வருவதாக ரசிகர்களுக்குத் தெரிவித்துள்ளார்.
பிடிஎஸ் உறுப்பினர்கள் அனைவரும் இராணுவ சேவையை முடித்து மீண்டும் இணைந்துள்ள நிலையில், தற்போது அவர்களின் 'Arirang World Tour' உலகளாவிய இசை நிகழ்ச்சித் தொடர் நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் நடந்த கச்சேரிக்கு பிறகு நடந்த இந்த நேரலையில், மற்றொரு உறுப்பினரான ஜங்குக் (Jungkook) தனது காலில் ஏற்பட்டுள்ள காயம் (Shin injury) பற்றியும் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.