கொழும்பில் தொழிலதிபரின் வீட்டில் பணமோசடி செய்த பெண் கைது

கொழும்பு - அத்துருகிரிய பகுதியில் தொழிலதிபரின் வீட்டிலிருந்து இரண்டு வங்கி அட்டைகளை திருடி பணமோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தொழிலதிபரின் வீட்டிலிருந்து இரண்டு வங்கி அட்டைகளை திருடி 19 லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேகத்திற்குரிய பெண்ணின் காதலர் தொழிலதிபரின் கீழ் கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், அவசர தேவைக்காக கொழும்பு வந்த தனது காதலிக்கு, தொழிலதிபரின் வீட்டில் ஓர் நாள் தங்குமிடம் வழங்குமாறு கோரியுள்ளார்.

இருப்பினும், தான் வீட்டில் தனியாக வசிப்பதால், தனியாக தங்குமிடம் வழங்க முடியாது என்றும், அதனால் அவரது தாயாருடன் வந்தால் தங்குமிடம் வழங்க முடியும் என்றும் தொழிலதிபர் கூறியுள்ளார்.

இதனையடுத்து தாயாருடன் குறித்த பெண் தொழிலதிபரின் வீட்டிற்கு சென்ற நிலையில், வங்கி அட்டைகளை திருடுமாறு காதலன் தனது காதலிக்கு அறிவுறுத்தியிருந்தது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன்படி, வீட்டில் ஒரே ஒரு இரவு மட்டும் தங்கியிருந்த சந்தேகத்திற்குரிய பெண்ணும் அவரது தாயாரும், வங்கி அட்டைகளை திருடிய பின்னர் இரவு வீட்டை விட்டுத் தப்பிச்சென்றுள்ளனர்.

இவர்கள் தப்பிச்செல்லும் வழியில், காதலனும் அவர்களுடன் சேர்ந்துகொண்டு, திருடப்பட்ட வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி ஐம்பதாயிரம் ரூபாயைப் பெற்று பின்னர் வடுவ பகுதியில் தங்கள் திருமணத்தை பதிவு செய்து விடுதியொன்றில் தங்கியுள்ளனர்

அடுத்த நாள், வெலிகம பகுதிக்கு சென்று கொண்டிருந்தபோது, ​​சந்தேகத்திற்குரிய பெண்ணின் காதலன் என்று கூறப்படும் நபர் பல பிடியாணை உத்தரவுகளின் பேரில் வெலிகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

தனது காதலன் கைது செய்யப்பட்ட பிறகு, சந்தேகத்திற்குரிய பெண் மாத்தறை பகுதிக்கு சென்று அங்கு, திருடப்பட்ட வங்கி அட்டைகளை பயன்படுத்தி இரண்டு நவீன கைபேசிகள், தங்கப் பொருட்கள் மற்றும் பல்வேறு பொருட்களை வாங்கியதாக பொலிஸார் கூறுகின்றனர்.

வங்கி அட்டைகள் பயன்படுத்தப்பட்ட கடைகளின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர், அத்துருகிரிய பொலிஸாரினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், ஹம்பாந்தோட்டை, சிறிபோபுரத்தைச் சேர்ந்த, 26 வயதான, ஒரு குழந்தையின் தாய் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கமைய, அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Connection failed: Operation not permitted