தென் கொரியாவில் அமெரிக்க ராணுவத் தளங்களை உளவு பார்த்ததாக, முன்னாள் சீன ராணுவ வீரர்கள் இருவரை தென் கொரியக் காவல்துறை கைது செய்துள்ளது

தென் கொரியாவில் இயங்கி வரும் அமெரிக்க ராணுவத் தளங்களுக்கு அருகில் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, முன்னாள் சீன ராணுவ வீரர்கள் இருவரை தென் கொரியக் காவல்துறை கைது செய்துள்ளது

40 வயதான கொரிய-சீன நபர் ஒருவர், சியோலுக்கு தெற்கே அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளமான 'கேம்ப் ஹம்ப்ரீஸ்' (Camp Humphreys) இல் பணிபுரிந்த தென் கொரியப் பெண் ஒருவருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.   அப்பெண்ணிற்குப் பணம் கொடுத்து, அமெரிக்கா மற்றும் தென் கொரிய கூட்டு ராணுவப் பயிற்சிகள் , தளபதிகளின் மாற்றங்கள் மற்றும் ஆயுதங்களின் நகர்வுகள் தொடர்பான ரகசியத் தகவல்களைப் பெற்றுள்ளார்.  

சீன ராணுவத்தில் பணியாற்றிய இவர், 2021 முதல் அந்த ராணுவத் தளத்திற்கு அருகில் ராணுவப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்திவந்துள்ளார். வியாபாரத்திற்காகவே இத்தகவல்களைச் சேகரித்ததாக இவர் கூறியுள்ளார்.  

60 வயதான மற்றொரு முன்னாள் சீன ராணுவ வீரர், குன்சான் விமான நிலையத்திற்கு (Gunsan Airport) அருகில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுற்றுலா விசா மூலம் தென் கொரியாவிற்கு வந்து, விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஹோட்டலில் தங்கி, 'Software-Defined Radio' (SDR) சாதனம், ஆன்டெனா மற்றும் கணினியைப் பயன்படுத்தி அமெரிக்க-தென் கொரிய போர் விமானங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கு இடையேயான உரையாடல்களை இடைமறித்துக் கேட்டுள்ளார்.

இது தனது "பொழுதுபோக்கு" என்று விசாரணையில் அவர் தெரிவித்துள்ள போதிலும், சேகரிக்கப்பட்ட விவரங்கள் சீனாவிற்கு அனுப்பப்பட்டதா என்பது குறித்துக் காவல்துறையினர் கணினி மூலம் ஆய்வு செய்து வருகின்றனர்.  

இருவர் மீதும் "பகை நாட்டுக்கு உதவியது" (Aiding an enemy state) மற்றும் ராணுவப் பாதுகாப்பு சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகச் சீன வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவிக்கையில், "இந்தச் சூழல் குறித்து எங்களுக்குத் தெரியாது" எனப் பதிலளித்துள்ளது.   

Bootstrap