இடிந்துவிழுந்த சுரங்கம்.. உள்ளே சிக்கிக்கொண்ட ஊழியர்கள்.. உத்தராகண்ட்டில் அதிர்ச்சி!

உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இந்திய அரசின் THDC (Tehri Hydro Development Corporation) நிறுவனத்தின் சுரங்கப்பாதை அமைந்துள்ளது. அங்கு பாயும் அலகநந்தா நதியின் (Alaknanda River) குறுக்கே மின்சார உற்பத்தியை இலக்காகக் கொண்டு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்தp பணிகள் நிறைவு பெற்றதும் 444 மெகாவாட் (MW) மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும் என்று அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. கடினமான இமயமலைப் பகுதியைக் குடைந்து சுமார் 13 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளத்திற்குச் சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று இரவு சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்த நிலையில், திடீரென சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.

இதனால் அங்கு வேலை செய்துகொண்டிருந்த பணியாளர்கள் சுரங்கத்துக்குள்ளேயே சிக்கிக்கொண்டுள்ளனர். காவல்துறை தரப்பில் 18 ஊழியர்கள் உள்ளே சிக்கிக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் உடனே அந்த பகுதியில் மீட்பு பணி முடுக்கி விடப்பட்டது. சுரங்கத்துக்குள் உள்ள இடிபாடுகளை கடந்து தற்போதுவரை 8 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீதம் இருக்கும் பணியாளர்கள் கூடிய விரைவில் மீட்கப்படுவர் என மீட்புப்படை சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Bootstrap