கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி டெல்லி செங்கோட்டைக்கு அருகே நடைபெற்ற கார் குண்டுவெடிப்பில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தத் தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகத்தின் (Al-Falah University) முன்னாள் மருத்துவ உதவிப் பேராசிரியரான உமர் உன்-நபியை இதன் முதன்மைக் குற்றவாளியாக தேசிய புலனாய்வு முகமை (NIA) அடையாளம் கண்ட நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 11 பேரை என்.ஐ.ஏ கைது செய்து, அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக, 7,500 பக்க குற்றப்பத்திரிக்கையையும் டெல்லி ரேஸ் அவென்யூ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தச்சூழலில் தான் இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கு அல்கொய்தாவின் பிராந்திய கிளையான AQIS (Al-Qaeda in the Indian Subcontinent) - தான் காரணம் என ஐநா பாதுகப்பு கவுன்சில் தெரிவித்துள்ளதாக ஐநாவின் பகுப்பாய்வு மற்றும் தடைகள் கண்காணிப்புக்குழு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
மேலும், பெரிய அளவிலான குழுக்களுக்குப் பதிலாக, சிறிய மற்றும் தனித்தனி சிறு குழுக்களை AQIS உருவாக்கி வருவதாகவும், தெற்காசியாவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்த முயற்சித்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறது. தொடர்ந்து, வங்கதேசத்தில் புதிய அமைப்பை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை அந்த அமைப்பு ஆராய்ந்து வருவதாகவும், அந்த அமைப்பின் வளர்ந்து வரும் செயல்பாட்டுத் திறன்களுக்கு செங்கோட்டைத் தாக்குதலே இதுவரை கிடைத்த மிகத் தெளிவான சான்று ஐநா சபை எச்சரித்திருக்கிறது.
இந்நிலையில் தான், இந்தியாவை உலுக்கிய செங்கோட்டை கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தின் பின்னால், அல்கொய்தா அமைப்பு இருப்பதாக ஐநா தெரிவித்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.