ஃபிஃபாவால் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படாத உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிக்கான நுழைவுச் சீட்டுகளை மறுவிற்பனை செய்ததால், பல வழக்குகள் குவிந்து வருகின்றன. இதனால், ஸ்டப்ஹப் (StubHub) நிறுவனம் தனது வருவாயை வாடிக்கையாளர்களுக்குத் திரும்பத் தர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு, நிகர நஷ்டத்தைச் சந்தித்துள்ளதோடு அதன் பங்குகளும் கடுமையாகச் சரிந்துள்ளன.
ஸ்டப்ஹப் தளத்தில் அதிக பணம் கொடுத்து டிக்கெட்டுகளை வாங்கிய ரசிகர்கள், அரங்கிற்குச் சென்றபோது அங்கே நுழைய முடியாமல் கடும் ஏமாற்றத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். ஃபிஃபா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக டிக்கெட்டுகளை வெளியிடுவதற்கு முன்பாகவே, மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் ஸ்டப்ஹப் தளத்தில் டிக்கெட்டுகளைப் பட்டியலிட்டு விற்க அனுமதித்ததே இந்த சிக்கலுக்கு முதன்மை காரணமாகும்.
வழக்கறிஞர் பிராட்ஃபோர்ட் கிளெமென்ட்ஸ் டிக்கெட் வாங்க முடியாத பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் சார்பாக ஸ்டப்ஹப் நிறுவனத்திற்கு எதிராக 275 வழக்குகளைப் பதிவு செய்து, இதுவரை $2.2 மில்லியன் டாலர்களை மீட்டுத் தந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஸ்டப்ஹப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எரிக் பேக்கர் (Eric Baker), ஃபிஃபாவின் சிக்கலான டிக்கெட் வழங்கல் முறையே இக்குழப்பத்திற்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.