தென்னிந்திய திரைப்பட நடிகர் விக்ரம், அரிய வகை விலங்கான 'லார் கிப்பன்' (Lar Gibbon) குரங்குடன் கொஞ்சி விளையாடும் காணொளி ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டது தேசிய அளவில் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விக்ரம் லார் கிப்பன் வகை குரங்குடன் விளையாடும் காணொளியை திங்கட்கிழமை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.
இது இணையத்தில் பரவியதை அடுத்து எழுந்த எதிர்ப்பையடுத்து, சில மணி நேரங்களிலேயே அந்த காணொளி அவரது கணக்கிலிருந்து நீக்கப்பட்டது.
இந்த விலங்கு சென்னைக்கு வந்தது எப்படி, அதனைப் பராமரிக்க உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பது குறித்துத் தமிழக வனத்துறையினர் மற்றும் வனவிலங்கு குற்றத்தடுப்புப் பிரிவு தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
இந்த விலங்கு நடிகர் விக்ரமின் உறவினரான தொழிலதிபர் ஒருவரின் சென்னை ஈஞ்சம்பாக்கம் பண்ணை வீட்டில் இருந்தது கண்டறியப்பட்டது.
முன்னதாக இந்த விலங்கு, மணிப்பூரிலிருந்து கடந்த ஜூன் மாதம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதிக்குக் கொண்டு வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து ஆகஸ்ட் 5 அன்று சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
எனினும், மாநில தலைமை வனவிலங்கு காப்பகத்தின் முறையான அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
லார் கிப்பன் குரங்குகள் தென்கிழக்கு ஆசிய காடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட சிறிய வகை குரங்குகளாகும்.
சர்வதேச அளவில் அழிந்துவரும் உயிரினமாகக் கருதப்படுவதால், CITES எனப்படும் சர்வதேச ஒப்பந்தம் மற்றும் இந்திய வனவிலங்கு சட்டங்களின் கீழ் கடுமையாகப் பாதுகாக்கப்படுகின்றன.
இந்தநிலையில், வெளிநாட்டு விலங்குகளை வளர்ப்பது மற்றும் இடமாற்றம் செய்வது தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு நடிகர் விக்ரமிற்குக் வனத்துறை அதிகாரிகள் அறிவித்தல் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
இந்தச் சம்பவம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு மற்றும் அரிய வகை விலங்குகளை வளர்ப்பது மற்றும் முறையற்ற கடத்தல் நடைமுறைகள் குறித்த விவாதங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.