கனடாவின் நோவா ஸ்கோடியாவில் மனித எச்சங்கள் மீட்பு!

கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணத்திலுள்ள கோல்செஸ்டர் கவுன்டீ பகுதியில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

டெபர்ட் பகுதிக்கு அருகிலுள்ள காடடர்ந்த பகுதியில் மனித எச்சங்கள் இருப்பதாகக் கடந்த ஜூலை 22 ஆம் திகதி கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டனர்.

மீட்கப்பட்ட எச்சங்கள் ஒரு ஆணுடையது என்றும், அவரது மரணத்தில் ஏதேனும் குற்றச் செயல்கள் அடங்கியிருக்கலாம் என நம்புவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், நோவா ஸ்கோடியா மருத்துவ பரிசோதனை சேவையின் உதவியுடன், உயிரிழந்த நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்தவும், அவரது மரணத்திற்கான காரணத்தைக் கண்டறியவும் புலனாய்வாளர்கள் முயன்று வருகின்றனர்.

அந்த நபரின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதில் இருந்து, அப்பகுதியில் விரிவான தேடுதல் வேட்டைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த சம்பவம் குறித்து மக்களிடையே பல்வேறு வதந்திகளும் சந்தேகங்களும் எழுந்துள்ளதை நாங்கள் அறிவோம். ஆனால், எங்கள் முதன்மைப் பொறுப்பு விசாரணையின் நிமித்தம் தகவல்களைப் பாதுகாப்பதே ஆகும் என நோவா ஸ்கோடியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விசாரணை இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே இருப்பதால், தற்போதைக்கு மேலதிக விவரங்கள் எதையும் வெளியிட முடியாது என பொலிஸார் கூறியுள்ளனர்.

Bootstrap