கனடாவில் சிறுமி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த ஹேமில்டனைச் சேர்ந்த சார்லஸ் பீட்டர் பில்லோன் (Charles Peter Billone - 64) என்பவர், 3 தசாப்தங்களுக்கும் (30 ஆண்டுகள்) மேலாக தலைமறைவாக இருந்த நிலையில் கலிபோர்னியாவின் சாண்டா குரூஸ் (Santa Cruz) பகுதியில் அமெரிக்க குடிவரவு அதிகாரிகளால் (ICE) கைது செய்யப்பட்டுள்ளார்.
1991-ஆம் ஆண்டு முதல் கனடாவில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியாக அமெரிக்க அதிகாரிகள் இவரைக் குறிப்பிட்டுள்ளனர்.
கலிபோர்னியாவில் கைது செய்யப்பட்ட நபர், தங்கள் விசாரணையில் தேடப்பட்டு வந்த அதே நபர் தான் என்பதை ஹேமில்டன் காவல் துறை உறுதி செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபருக்குத் திருடப்பட்ட சொத்துக்களை வைத்திருந்தமை, தாக்குதல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான பிற குற்றங்களிலும் முந்தைய தண்டனைகள் உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்கச் அமலாக்கப் பிரிவின் (ICE) காவலில் உள்ள அவர் மீதான நாடுகடத்தல் நடவடிக்கைகள் (removal proceedings) பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அதேவேளையில், தற்போது முறையான நாடுகடத்தல் நடைமுறைகள் (extradition proceedings) எதுவும் தொடங்கப்படவில்லை என ஹேமில்டன் காவல் துறை தெரிவித்துள்ளது.