முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றினார் தமிழக முதல்வர் விஜய்

இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜொர்ஜ் கோட்டையில் தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் இன்று (15) காலை 8.45 மணியளவில் முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. கூட்டணி ஆட்சி அமைத்து மூன்று மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், நாட்டின் 80ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது.

சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காக நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து புறப்பட்ட முதல்வர் விஜய், மெரீனா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகிலிருந்து பொலிஸின் மோட்டார் சைக்கிள் அணிவகுப்புடன் புனித ஜொர்ஜ் கோட்டையை வந்தடைந்தார்.

கோட்டையில் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர், திறந்த வாகனத்தில் சென்று பொலிஸாரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து காலை 8.45 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து சுதந்திர தின உரையாற்றவுள்ள முதல்வர் விஜய், பல்வேறு விருதுகளையும் வழங்கவுள்ளார். இதில் தகைசால் தமிழர் விருது, அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகசத்துக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல்ஆளுமை விருது, சமூகநல சேவைக்கான விருது உள்ளிட்ட விருதுகளும், சிறந்த மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கான விருதுகளும் அடங்குகின்றன.

Bootstrap