இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (15) 13ஆவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், டில்லி செங்கோட்டையில் நடைபெற்ற பிரதான விழாவில் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பங்கேற்க செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடிக்கு முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அவரை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
தொடர்ந்து பிரதமர் முப்படை மற்றும் டில்லி பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவில் முதன்முறையாக வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பமாகின.
பின்னர் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். தேசியக் கொடி ஏற்றப்பட்டதும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இந்திய விமானப்படை சார்பில் ஹெலிக்கொப்டர்கள் மூலம் தேசியக் கொடிக்கு மலர் தூவப்பட்டது.
சுதந்திர தின உரையில் நாட்டின் வளர்ச்சி, பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பிரதமர் மோடி பேசினார்.
நாட்டின் கனவுகளும் இலட்சியங்களும் உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்றும், அவற்றை நனவாக்குவதற்கான உறுதியும் வலுவான மனவலிமையும் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
சவால்கள் மற்றும் பேரிடர்களுக்கு மத்தியில் நாட்டிற்கான பாதையை கண்டறியும் திறனை வலுவான மன உறுதி வழங்கும் எனக் குறிப்பிட்ட பிரதமர், 140 கோடி இந்தியர்களின் கூட்டு முயற்சியுடன் நாடு புதிய உயரங்களை எட்ட வேண்டும் என்றும், உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா வளர்ந்த நாடாக உருவாக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதற்கு முன்னதாக, டில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தியிருந்தார்.