முதல்வர் விஜய்யின் முதல் கொடியேற்ற விழா - த்ரிஷா பங்கேற்பு

சென்னை புனித ஜொர்ஜ் கோட்டையில் தமிழக முதல்வர் விஜய் முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றிய சுதந்திர தின விழாவில், அவரது பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழகத்தில் த.வெ.க. அரசு அமைந்த பின்னர் நடைபெற்ற முதல் சுதந்திர தின விழா இன்று (15) நடைபெற்றுள்ளது.

விழாவில் பங்கேற்பதற்காக நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து புறப்பட்ட முதல்வர் விஜய், மெரீனா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகிலிருந்து காவல்துறையின் மோட்டார் சைக்கிள் அணிவகுப்புடன் புனித ஜார்ஜ் கோட்டையை வந்தடைந்தார்.

அங்கு பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர், திறந்த வாகனத்தில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து காலை 8.45 மணியளவில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் பல்வேறு நலத்திட்ட உதவிகள், விருதுகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கான பதக்கங்களை வழங்கினார்.

முதல்வர் விஜய் தேசியக் கொடியை ஏற்றிய நிகழ்வில் அவரது பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகர் கலந்துகொண்டனர்.

மேலும் நடிகை த்ரிஷாவும் விழாவில் பங்கேற்றார். விஜய்யின் பெற்றோர் அமர்ந்திருந்த பகுதிக்கு அருகிலேயே அவருக்கும் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் அணிவகுப்பு நடைபெற்றபோது முதல்வர் விஜய் மரியாதை செலுத்திய நிலையில், நடிகை த்ரிஷாவும் அவரைப் பார்த்து மரியாதை செலுத்தினார்.

விழா நிறைவடைந்து முதல்வர் விஜய் அங்கிருந்து புறப்பட்டபோது, அவரது பெற்றோர் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் கையசைத்து அவரை வழியனுப்பி வைத்தனர்.

சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷா பங்கேற்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

Bootstrap