ஈரானியப் படைகளைத் தோற்கடித்த பின் ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பிராந்தியமாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் தெரிவிப்பு

இடைவிடாது தொடரும் ஈரான் மீதான மோதலுக்கு மத்தியில், நியூயார்க்கின் கார்டன் சிட்டியில் உள்ள நாசாவ் கவுண்டி காவல் அகாடமியில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய கருத்துக்கள் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஈரானியப் படைகளைத் தோற்கடித்த பிறகு, மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) "விரைவில்" அமெரிக்க பிராந்தியமாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.

அந்தப் பகுதியில் அமெரிக்க கடற்படை ஒரு "எஃகுச் சுவர்" (wall of steel) போன்ற முற்றுகையை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

மோதலால் உயர்ந்து வரும் எரிபொருள் விலையைக் குறிப்பிட்டுப் பேசிய டிரம்ப், ஈரானின் அணுசக்தி திறனைத் தடுப்பதற்கு அமெரிக்க மக்கள் பெட்ரோல் விலை உயர்வைக் சகித்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

டிரம்பின் இந்த அறிவிப்பை ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபாடி கடுமையாக மறுத்துள்ளார்.

"ஹோர்முஸ் நீரிணை ஈரானுக்குச் சொந்தமானது, எப்போதும் ஈரானுக்குச் சொந்தமாகவே இருக்கும்" என்றும், அமெரிக்கா தனது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தும் வரை ஈரான் தனது முற்றுகையைத் தொடரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) போக்குவரத்தில் சுமார் 20% இந்த நீரிணை வழியே நடைபெறுகிறது. இந்த மோதலால் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $90 வரை உயர்ந்துள்ளது.

இந்நிலையில்  அமெரிக்கா  ஈரான் மீது அடுத்த வாரம் முதல் மேலும் கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளது.

Bootstrap