ஓமன் கடற்பகுதியில் பரவும் பிரம்மாண்ட எண்ணெய் கசிவு

ஓமன் கடற்பகுதியில் கப்பலில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய், அரபிக்கடலில் சுமார் 500 முதல் 770+ சதுர மைல் (1,300 - 2,000+ சதுர கிலோமீட்டர்) பரப்பளவிற்குப் பல்வேறு பகுதிகளாகப் பிரிந்து பரவியுள்ளது.

 கப்பல் தரைதட்டிய இடத்தில் இருந்து 120 மைல்களுக்கும் அதிகமான தூரம் பயணித்து, ஓமனின் ராஸ் மத்ரகா  கடற்கரையில் சுமார் 25 மைல்  தூரத்திற்குப் பரவியுள்ளது. மேலும் இது மசீரா தீவையும் அச்சுறுத்தி வருகிறது.

சுமார் 8,000,000 பேரல் கச்சா எண்ணெயைச் சுமந்து சென்ற கேரோலின் பெசெங்கி (Caroline Bezengi) என்ற ரஷ்ய நிழல் கப்பற்படையைச் சேர்ந்த டேங்கர் கப்பலில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு காரணமாக அல்-கிப்லியா  தீவு அருகே தரைதட்டியதால் இந்த கசிவு ஏற்பட்டது.

இந்த எண்ணெய் கசிவால் பவளப்பாறைகள், கடல் புல்வெளிகள், அழியும் நிலையில் உள்ள ஆமைகள் முட்டையிடும் பகுதிகள் மற்றும் அரிய வகை அரபிக்கடல் கூன்முதுகு திமிங்கலங்கள்   போன்ற சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த கடல்வாழ் உயிரினங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

பிரித்தானிய கடல்சார் பாதுகாப்பு நிறுவனமான ஆம்பிரே தலைமையில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இருப்பினும், "கரீஃப்"  என்ற வருடாந்திர தென்மேற்கு பருவமழை மற்றும் மோசமான வானிலை காரணமாகப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஓமன் அரசு பொதுமக்களை பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீன்பிடிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதுடன், சந்தைகளில் விற்பனை செய்யப்படும் கடல் உணவுகளை ஆய்வு செய்து வருகிறது.

Bootstrap