1983-இல் செய்யாத இரட்டை கொலைக் குற்றத்திற்காகத் தவறாகத் தண்டிக்கப்பட்டு, 41 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட குளோட் பாக்கின் (Claude Paquin) என்ற 83 வயது முதியவர், மொண்ட்ரியால் நகரம் மற்றும் கியூபெக் மாகாண அரசுடன் பல மில்லியன் டாலர் மதிப்பிலான இழப்பீட்டு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளார்.
1978-இல் லோரென்டியன்ஸில் (Laurentians) ரொனால்ட் பூர்குவின் மற்றும் சில்வி ரேவா என்ற தம்பதியர் கொல்லப்பட்ட வழக்கில், 1983-இல் பாக்கின் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இவர் 18 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு 2001-இல் கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
பெர்னார்ட் புரோவென்சல் என்ற காவல் துறை தகவலாளியின் பொய் சாட்சியம் மற்றும் மாற்றப்பட்ட ஆதாரங்கள் மூலம் பாக்கின் தவறாகத் தண்டிக்கப்பட்டது 'புரோஜெட் இன்னொசென்ஸ் கியூபெக்' (Projet Innocence Québec) அமைப்பால் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து 2024 நவம்பர் 6 அன்று இவர் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்.
தனது வாழ்நாளைப் பறித்ததற்காக மொண்ட்ரியால் காவல்துறை மற்றும் கியூபெக் அரசுக்கு எதிராகப் பாக்கின் $89 மில்லியன் டாலர் இழப்பீடு கோரி மே 2025-இல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீண்ட விசாரணைக்குச் செல்வதைத் தவிர்க்கும் வகையில் இரு தரப்பும் ஒரு தொகையை இழப்பீடாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளன. ரகசியத்தன்மை ஒப்பந்தம் காரணமாக வழங்கப்பட்ட சரியான தொகை விவரங்கள் வெளியிடப்படவில்லை.