வெர்ஜீனியா ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் காயம்

அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தில் உள்ள வெர்ஜீனியா ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் (Virginia State University) சனிக்கிழமை அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டாளர்கள் (Multiple shooters) ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

பல்கலைக்கழகத்தின் 'குவாட் அனெக்சஸ்' (Quad Annexes) விடுதிப் பகுதிக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடந்தது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த 5 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக  உள்ளது. மற்றைய 4 பேருக்கு உயிருக்கு ஆபத்தில்லாத காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இச்சம்பவத்தில் பல சந்தேக நபர்கள் தொடர்பிலிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வி.எஸ்.யூ (VSU) வளாகக் காவல்துறை மற்றும் செஸ்டர்ஃபீல்ட் கவுண்டி காவல்துறையினருடன் இணைந்து ATF மற்றும் உள்ளூர் ஷெரிப் அமைப்புகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

 துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து பல்கலைக்கழக வளாகம் உடனடியாக முடக்கப்பட்டது. பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அப்பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

புதிய கல்வி ஆண்டு தொடங்க சில தினங்களே உள்ள நிலையில், கடந்த வாரம் தான் மாணவர் விடுதிகள் திறக்கப்பட்டன. திங்கள்கிழமை வகுப்புகள் தொடங்கவிருந்த நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது.

Bootstrap