சீன ராக்கெட் ஏவப்பட்ட சில வினாடிகளில் வெடித்துச் சிதறியது

ஆகஸ்ட் 10 அன்று, சீனாவின் ஹைனான் தீவில் உள்ள வென்சாங் (Wenchang) விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்ட லாங்மார்ச் 7ஏ (Long March 7A) ராக்கெட், கிளம்பிய 85 வினாடிகளில் காற்றில் வெடித்துச் சிதறியது.

 உலகளவில் ரேடியோ, தொலைக்காட்சி மற்றும் தகவல் தொடர்பு சேவைகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஜோங்சிங்-4பி (Zhongxing-4B) என்ற செயற்கைக்கோளை இந்த ராக்கெட் சுமந்து சென்றது.

 ராக்கெட் ஏவப்பட்டு 3 மணி நேரத்திற்குப் பிறகு, "பயணத்தின் போது கோளாறு ஏற்பட்டது" எனச் சீன அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா (Xinhua) உறுதிப்படுத்தியது. இருப்பினும், சீன அரசு ஊடகங்கள் இந்த விபத்தைக் பெரிதாகக் குறிப்பிடாமல் மறைத்தன. மேலும் ஷியோஹோங்ஷு (Xiaohongshu), டூயின் (Douyin) போன்ற சமூக வலைதளங்களில் பயனர்கள் பதிவிட்ட வீடியோக்களும் நீக்கப்பட்டன.

இந்த ராக்கெட் விபத்தைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை லேண்ட்ஸ்பேஸ் (LandSpace) என்ற தனியார் நிறுவனம் நடத்தத் திட்டமிட்டிருந்த ஜூக்வே-3 (Zhuque-3) என்ற மீளப்பயன்பாட்டு ராக்கெட்டின் (Reusable Rocket) சோதனையும் ஒத்திவைக்கப்பட்டது.

Bootstrap