மேற்குக்கரையில் யூதக் குடியேற்றவாசிகளின் முற்றுகையில் பாலஸ்தீனக் குடும்பங்கள்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் உள்ள குஸ்ரா (Qusra) கிராமத்தில், பாலஸ்தீனக் குடும்பங்களின் வீடுகளை ஆக்கிரமிக்கும் நோக்கில் இஸ்ரேலிய யூதக் குடியேற்றவாசிகள்  குன்றின் மீதிருந்த வீடுகளைச் சுற்றி வளைத்து முற்றுகையிட்டுள்ளனர்.

குடியேற்றவாசிகள் கூடாரம் அமைத்து, குடிநீர் மற்றும் மின்சார இணைப்புகளைத் துண்டித்ததுடன், சாலைகளையும் மறித்துள்ளனர். இதனால் வீடுகளுக்குள் சிக்கியுள்ள குடும்பங்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடக்கத்தில் ராணுவ வீரர்கள் குடியேற்றவாசிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், பின்னர் அவர்களைக் கலைக்க முயன்றனர். இருப்பினும், ராணுவம் அப்பகுதியை "மூடப்பட்ட ராணுவ மண்டலமாக" அறிவித்து, பாலஸ்தீனர்கள் மற்றும் செய்தியாளர்களின் வருகையைத் தடைசெய்துள்ளது.

 இது ஒரு தனிப்பட்ட சம்பவமல்ல. கடந்த மாதத்தில் ஜாலுத் (Jalud) கிராமத்திலும் இதேபோன்று பாலஸ்தீனக் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு வீடுகள் ஆக்கிரமிக்கப்பட்டன. ஐக்கிய நாடுகள் சபையின் (UN) தகவலின்படி, இந்த ஆண்டில் மட்டும் 3,200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் குடியேற்றவாசிகளின் தாக்குதல்களால் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பாலஸ்தீன-அமெரிக்கரான லூயி ரிடி என்பவரின் குடும்பமும் இதில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதர் மைக் ஹக்கபி (Mike Huckabee) இச்சம்பவத்தைக் கண்டித்துள்ளார். எனினும், அங்குள்ள குடும்பங்கள் தொடர்ந்து அச்சத்திலும் முற்றுகையிலும் வாழ்ந்து வருகின்றன.

Bootstrap