இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 47 ஆக உயர்வு

இந்தோனேசியாவின் புளோரஸ் (Flores) தீவுப் பகுதியில் சனிக்கிழமை காலை 6:00 மணியளவில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது என்டே (Ende) நகரத்திலிருந்து 68 கி.மீ வடமேற்கே மையம் கொண்டிருந்தது.

இந்த நிலநடுக்கத்தால் இதுவரை குறைந்தது 47 பேர் உயிரிழந்துள்ளனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும், 2,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுப் பின்னர் திரும்பப் பெறப்பட்டது. இருப்பினும் என்டே பகுதியின் மவ்ரோல் (Maurole) கடற்கரையில் 1 மீட்டர் (3 அடி) உயரத்திற்குச் சுனாமி அலைகள் பதிவாகின.

 50-க்கும் மேற்பட்ட வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் சேதமடைந்துள்ளன. சிக்கா (Sikka) பகுதியில் உள்ள தேவாலயப் பிரார்த்தனைக் கூடத்தின் கூரை இடிந்து விழுந்ததில் பலர் பீதியடைந்து தப்பி ஓடினர்.

நிலச்சரிவு காரணமாகச் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர்கள் மூலம் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியவர்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Bootstrap