கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மிக இளைய கருப்பின பேராசிரியரான ஜேசன் ஆர்டே (Jason Arday - 41), லண்டனில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது கல்விச் சான்றுகள், ஆராய்ச்சிகள் மற்றும் அறக்கட்டளைப் பணிகள் குறித்து முறைகேடு மற்றும் திருட்டு (Plagiarism) குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்த மாதத் தொடக்கத்தில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஜேசன் ஆர்டேவின் மறைவு குறித்து அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், "கேம்பிரிட்ஜ் பேராசிரியராகப் பொறுப்பேற்றது முதல் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் திட்டமிடப்பட்ட தொடர் அவதூறுகளுக்கும் ஹராஸ்மென்ட்டிற்கும் ஆளாக்கப்பட்டார். இந்த தவறான பிரச்சாரங்களை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை" என்று தெரிவித்துள்ளனர்.
பிரிட்டன் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் இச்சம்பவத்தை "மிகப்பெரிய துயரம்" எனக் குறிப்பிட்டதுடன், நிலைமை எவ்வாறு இங்கு வரை வந்தது என்பது குறித்து யோசிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
லண்டன் மேயர் சாதிக் கான், ஜேசன் ஆர்டே இரக்கமற்ற "பொதுவெளி அவமானப்படுத்துதலுக்கு" (Public Shaming) பலியாகியுள்ளார் என்று வேதனை தெரிவித்துள்ளார்.
பிற பேராசிரியர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விட, இவர் மீது ஊடகங்களும் வலதுசாரி அமைப்புகளும் இனவெறி நோக்கில் மிகக் கடுமையான தாக்குதலை நடத்தியதாகக் கல்வியாளர்கள் மற்றும் தொண்டு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.