வடகொரியாவுடனான போரை முறைப்படி முடிவுக்குக் கொண்டுவர தென்கொரியா பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் (Lee Jae Myung), வடகொரியாவுடன் அதிகாரப்பூர்வமாக போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன்மொழிந்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையான படைநீக்கப்பட்ட மண்டலத்தில் பதற்றங்களைத் தவிர்க்கவும், வடகொரியாவின் அணுஆயுதத் திட்டங்களை நிறுத்துவதற்கான வழிகளைக் கண்டறியவும் "பன்முகப் பாதுகாப்பு அமைப்பை" உருவாக்க அதிபர் லீ முன்மொழிந்துள்ளார்.

1953-ல் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானபோதிலும், அமைதி ஒப்பந்தம் எதுவுமில்லை என்பதால் இரு நாடுகளும் தொழில்நுட்ப ரீதியாக இன்னும் போரிலேயே உள்ளன.

 கொரிய தீபகற்பம் ஜப்பானிய ஆட்சியில் இருந்து விடுவிக்கப்பட்டதை நினைவுகூரும் விடுதலை நாள் விழாவில் பேசிய லீ, பரஸ்பரம் அச்சுறுத்துவதைக் கைவிட்டு நேரடிப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பிற்கு வடகொரியா இதுவரை அதிகாரப்பூர்வமாகப் பதிலளிக்கவில்லை. மேலும், தென்கொரியாவைத் தனது "முதன்மை எதிரி" எனக் குறிப்பிட்ட வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், தென்கொரியாவுடனான இணைப்பு இனி சாத்தியமில்லை எனக் கூறியுள்ளார்.

Bootstrap