தாய் மற்றும் தம்பியின் உயிரை பறித்த 17 வயதுச் சிறுவன்: 'ChatGPT' செயலியைக் கொண்டு திட்டம் தீட்டியமை அம்பலம்!

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் தனது தாயார் மற்றும் சகோதரின் உயிரை பறித்த குற்றச்சாட்டின் பேரில் 17 வயதுச் சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

அர்ஜுன் அரவிந்த் என்ற 17 வயதுடைய சிறுவன் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் குறித்த விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்ட சிறுவன் இந்த குற்றத்தை புரிவதற்கு முன்னதாக 'ChatGPT' செயற்கை நுண்ணறிவுச் செயலியைப் பயன்படுத்தித் தனது குடும்பத்தினரை மரணிக்க செய்வது தொடர்பான கதைகள் மற்றும் கற்பனைக் காட்சிகளை உருவாக்கியுள்ளதாக மாவட்ட அரச சட்டத்தரணி மேரியன் ரியான் (Marian Ryan) தெரிவித்துள்ளார்.

வீட்டிலிருந்த இருவருடன் தொடர்புகொள்ள முடியவில்லை என தந்தை அளித்த தகவலின் பேரில், காவல்துறையினர் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது முதல் தளத்தில் சகோதரனும், அடித்தளத்தில் தாயாரும் உயிரிழந்த நிலையில் உடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தின் பின்னர் தாயின் வாகனத்தில் தப்பிச் சென்ற சந்தேகநபரான சிறுவனை மறுநாள் காலையில் காவல்துறையினர் கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அந்தச் சிறுவனுக்குப் பிணை மறுக்கப்பட்டுத் தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Bootstrap