ஜிம்பாப்வே படகு விபத்தில் 18 குழந்தைகள் உட்பட 72 பேர் உயிரிழப்பு.

ஜிம்பாப்வேயின் கரிபா ஏரியில் அதிக அளவு பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70-க்கும் மேலாக உயர்ந்துள்ளதாகவும், அதில் 18 குழந்தைகளும் அடங்குவர் என்றும்  பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை பலத்த அலையின் காரணமாக இந்தப் படகு கவிழ்ந்தது. அதன்பிறகு மேலும் 26 சடலங்கள் மீட்கப்பட்டு, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

பழமையான அந்தப் படகு, கரிபா நகரத்திலிருந்து நாட்டின் வடமேற்கில் உள்ள கிராமப்புற மற்றும் மீன்பிடி சமூகங்களை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்தப் பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளதோடு, பொதுப்போக்குவரத்து வசதிகளும் குறைவாகவே உள்ளன. படகில் எத்தனை பேர் பயணித்தார்கள் அல்லது எத்தனை பேர் இன்னும் மாயமாகியுள்ளனர் என்ற விவரங்களை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை.

படகின் கொள்ளளவு 90 பேர் மட்டுமே என அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், பயணித்தவர்களின் எண்ணிக்கை 153 வரை இருந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 77 பேர் மீட்கப்பட்டுள்ளதாக ஜிம்பாப்வேயின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.

டிக்கெட் வாங்கும் வயதிற்குக் குறைவாக இருந்த குழந்தைகள், பயணிகள் எண்ணிக்கையில் சேர்க்கப்படாததால், படகில் இருந்த குழந்தைகளின் எண்ணிக்கை ஆரம்பத்தில் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறியிருந்தனர். பின்னர் பொலிஸாரால் வெளியிடப்பட்ட பட்டியலில், உயிரிழந்த குழந்தைகளில் 16 பேர் 10 வயது அல்லது அதற்குட்பட்டவர்கள் என்றும், அதில் மிகக் இளைய குழந்தைக்கு 1 வயது மட்டுமே என்றும் தெரியவந்துள்ளது.

1950-களின் பிற்பகுதியிலும் 1960-களின் தொடக்கத்திலும் சக்திவாய்ந்த சாம்பேசி நதியை  மறித்துக் கட்டப்பட்ட அணையின் மூலம் உருவான கரிபா ஏரி, பரப்பளவின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரியாகும். இது 200 கிலோமீட்டருக்கும் (124 மைல்கள்) அதிகமான நீளமும், சில இடங்களில் 40 கிலோமீட்டர் (25 மைல்கள்) வரை அகலமும் கொண்டது.

ஜிம்பாப்வே மற்றும் சாம்பியா ஆகிய இரு நாடுகளும் இந்த ஏரியைப் பகிர்ந்துகொள்கின்றன, இதன் எல்லை ஏரியின் நடுவே செல்கிறது.

Bootstrap