ஐரோப்பாவில் வீசும் கடும் வெப்ப அலை.. 16 ஆயிரமாக உயர்ந்த உயிரிழப்பு

ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஜூன் மாத இறுதியில் வீசிய வரலாறு காணாத கடும் வெப்ப அலையால், வழக்கமான உயிரிழப்பு எண்ணிக்கையை விட சுமார் 16,000 பேர் கூடுதலாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட வடக்கு ஐரோப்பிய நாடுகளில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக ஐரோப்பிய இறப்பு கண்காணிப்பு வலையமைப்பு (European Mortality Monitoring Network) ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வெப்ப அலையின் தாக்கத்தால் பல பகுதிகளில் வெப்பநிலை வழக்கமான அளவைவிட பல டிகிரி அதிகரித்தது எனவும் இதன் காரணமாக வயதானவர்கள், ஏற்கனவே உடல்நலப் பிரச்சினைகள் கொண்டவர்கள் மற்றும் அதிக வெப்பத்தைத் தாங்க முடியாதவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதேசமயம், கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், வடக்கு ஐரோப்பிய நாடுகளில் வெப்பத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகமாக இருந்துள்ளன.

நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஸ்பெயின், இத்தாலி, கிரீஸ் உள்ளிட்ட தெற்கு ஐரோப்பிய நாட்கள் நீண்டகாலமாக வெப்ப அலையை எதிர்கொள்ள நீண்ட காலமாகவே பழகியிருக்கின்றனர். அதனால் அங்கு வெப்பத்தை சமாளிப்பதற்கான கட்டமைப்புகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அதிகமாக உள்ளன.

அதேசமயம், வீடுகள் மற்றும் கட்டிடங்களில் ஏர் கண்டிஷனிங் வசதிகளுடன் தெற்கு ஐரோப்பாவை ஒப்பிடும்போது வடக்கு ஐரோப்பாவில் குறைவாகவே இருக்கிறது. இதன்காரணமாக, பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட வடக்கு ஐரோப்ப நாடுகள் வெப்ப அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது.

இந்தநிலையில், கடந்த 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான மிக மோசமான வெப்ப அலை மரண விகிதம் இதுவென பெல்ஜியம் சுகாதார அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.

ஆண்டின் இந்த காலகட்டத்தில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் மரணங்கள் பதிவாவது மிகவும் அசாதாரணமானது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். மனிதர்களின் செயல்பாடுகளால் ஏற்படும் காலநிலை மாற்றமே இத்தகைய அதீத வெப்ப அலைகளுக்கு முக்கியக் காரணம் என்றும், இனிவரும் காலங்களில் இவை இன்னும் அடிக்கடி தீவிரமடையும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Bootstrap