ஸ்பெயின் காட்டுத் தீ... 15,000 ஹெக்டேர் எரிந்து நாசம்.. வீடுகளை விட்டு வெளியேறிய குடும்பங்கள்!!

ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் நிலவி வரும் கடும் வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக காட்டுத்தீ வேகமாகப் பரவி வரும் நிலையில், ஸ்பெயினின் மாட்ரிட் (Madrid) மற்றும் அவிலா (Avila) பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயால் சுமார் 15,000 ஹெக்டேர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

ஏற்கனவே, வரலாறு காணாத கடும் வெப்ப அலையால் ஐரோப்பிய நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக காட்டுத்தீ சம்பவங்களும் அந்நாடுகளை கடுமையாக அச்சுறுத்தி வருகின்றன.

அந்தவகையில் தான், ஸ்பெயினில் கடந்த ஒருவாரமாக நிலவிவரும் காட்டுத்தீயால், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மாட்ரிட் பகுதியில் மட்டும் பல ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்துள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்கு அருகிலும் தீ பரவியதால், பொதுமக்களை வெளியேற்றுவதுடன், சில பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் இருக்கவும் உத்தரவிடப்பட்டது.

அவிலா மாகாணத்தில் ஏற்பட்ட தீயிலும் நிலைமை தீவிரமாக இருந்தது. அங்கு மட்டும் 13,000 முதல் 15,000 ஹெக்டேர் வரை நிலப்பரப்பு தீக்கிரையானதாக ஸ்பெயின் உள்துறை அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காட்டுத்தீயை கட்டுப்படுத்த ஸ்பெயின் தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரகாலப் பணியாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். தீயின் தீவிரம் காரணமாக ஐரோப்பிய நாடுகளிடமிருந்தும் ஸ்பெயினுக்கு உதவி கோரப்பட்டுள்ளது. கிரீஸ் மற்றும் இத்தாலி உள்ளிட்ட நாடுகள் தீயணைப்பு விமானங்களை அனுப்பியுள்ளன.

ஸ்பெயினை மட்டுமல்லாமல், பிரான்ஸ், கிரீஸ், இத்தாலி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளும் தற்போது காட்டுத்தீயை எதிர்கொண்டு வருகின்றன.

கடுமையான வெப்பநிலை, நீடித்த வறட்சி மற்றும் பலத்த காற்று ஆகியவை காட்டுத்தீ வேகமாகப் பரவுவதற்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளன. காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் வெப்ப அலைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், காட்டுத்தீயின் பரவலும் அதிகரித்து வருவது ஐரோப்பிய நாடுகளுக்கு புதிய சவாலாக மாறியுள்ளது.

Bootstrap