டொராண்டோ மிதிவண்டிப் பாதைகளை அகற்ற ஃபோர்டு அரசுக்கு ஒன்டாரியோவின் உச்ச நீதிமன்றம் அதிகாரம் அளித்துள்ளது

ஒன்டாரியோவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் (Court of Appeal), டொராண்டோவின் மூன்று முக்கியச் சாலைகளில் உள்ள மிதிவண்டிப் பாதைகளை (Bike Lanes) அகற்றுவதற்கு டக் ஃபோர்டு (Doug Ford) தலைமையிலான மாகாண அரசுக்கு அதிகாரம் உண்டு எனத் தீர்ப்பளித்துள்ளது.

புளூர் தெரு (Bloor Street), யாங் தெரு (Yonge Street) மற்றும் யுனிவர்சிட்டி அவென்யூ (University Avenue) ஆகியவற்றில் உள்ள மிதிவண்டிப் பாதைகளை அகற்றிவிட்டு, மோட்டார் வாகனப் பாதைகளாக மாற்ற வகை செய்யும் மாகாண அரசின் 'சட்டம் 212' அரசியல் சாசனத்திற்கு எதிரானது என கீழ் நீதிமன்றம் முன்னர் தீர்ப்பளித்திருந்தது.

கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்த மேல்முறையீட்டு நீதிமன்றம், மிதிவண்டிப் பாதைகள் நல்லதா அல்லது கெட்டதா என்பதைத் தீர்மானிப்பது அரசியல் சாசனத்தின் பணி அல்ல என்றும், அது அரசின் கொள்கை சார்ந்த முடிவு என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

 போக்குவரத்து அமைச்சர் பிரப்மீத் சர்க்காரியா, "மிதிவண்டிப் பாதைகள் இரண்டாம் நிலைச் சாலைகளில் அமைக்கப்பட வேண்டுமே தவிர, பரபரப்பான முக்கியச் சாலைகளில் வாகனப் பாதைகளை ஆக்கிரமித்து அமைக்கப்படக் கூடாது" எனக் குறிப்பிட்டு, இத்தீர்ப்பை வரவேற்றுள்ளார்.

இத்தீர்ப்பு தங்களுக்கு பின்னடைவு எனத் தெரிவித்துள்ள 'சைக்கிள் டொராண்டோ' (Cycle Toronto) அமைப்பு, மிதிவண்டிப் பாதைகளை அகற்றுவது மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும், இச்சட்டத்தை எதிர்த்துத் தொடர்ந்து போராடப்போவதாகவும் தெரிவித்துள்ளது.

Bootstrap