ஹங்கேரியில் போலந்து சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 12 பேர் உயிரிழப்பு

ஹங்கேரியின் நெடுஞ்சாலையில் போலந்து நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட்டை வடகிழக்கு நகரமான நைரெஜிஹாசாவுடன் இணைக்கும் M3 நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உள்ளூர் நேரப்படி சுமார் 01:00 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பேருந்தின் சாரதி வாகனத்தைச் செலுத்தும்போது தூங்கியதே விபத்துக்குக் காரணம் எனப் பொலிஸார் கருதுகின்றனர். இதனை அடுத்து பேருந்து சாரதியைப் பொலிஸார் கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.

பேருந்தில் 57 பயணிகள் மற்றும் இரண்டு சாரதிகள் உட்பட மொத்தம் 59 பேர் இருந்துள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் 35 பேரைக் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். 24 தொன் எடையுள்ள பேருந்தின் அடியில் சிக்கியவர்களை மீட்க கிரேன்கள்  வரவழைக்கப்பட்டுப் பேருந்து உயர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 09 பேர் பலத்த காயங்களுடனும், 37 பேர் லேசான காயங்களுடனும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Bootstrap