அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை 50 சதவீதமாக வீழ்ச்சி - வெரிட்டே ரிசர்ச் நிறுவனம்

வெரிட்டே ரிசர்ச் (Verité Research) நிறுவனம் நடாத்திய Gallup பாணியிலான தேசத்தின் மனநிலை (Mood of the Nation) பற்றிய ஒட்டுமொத்த ஜூலை 2026 கருத்துக்கணிப்பில், அரசாங்கத்தின் மீதான மக்களின் அங்கீகாரம் (Government approval rating) 50% ஆகக் குறைந்துள்ளது. இது கடந்த பிப்ரவரி 2026 இல் பெறப்பட்ட தேர்தல் வெற்றிக்கு பின்னரான உச்ச நிலையான 65% உடன் ஒப்பிடுகையில் ஒரு குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகும்.கருத்துக்கணிப்பு பங்குதாரராக வான்கார்ட் சர்வே (பிரைவேட்) லிமிடெட் (Vanguard Survey (Pvt) Ltd.) நிறுவனம் செயற்பட்டது.

பொருளாதாரத்தின் எதிர்கால நிலை குறித்த மக்களின் மதிப்பீடுகள் குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியடைந்துள்ளன. பொருளாதாரம் “முன்னேறி வருகிறது” எனக் கருதுவோரின் வீதம், முன்னைய சுற்றில் பதிவான 64% இலிருந்து 42% ஆகக் குறைந்துள்ளது.

பொருளாதாரம் “மோசமடைந்து வருகிறது” எனக் கூறியோரின் வீதம் 40% ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, அரசாங்கத்தின் செயற்பாட்டை “ஏற்றுக்கொள்ளவில்லை” எனக் கூறியோரின் வீதமும் 31% ஆக உயர்ந்துள்ளது. இவ்விரு வீதங்களும் முன்னைய சுற்றில் சுமார் 15% ஆக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொருளாதார தொலைநோக்கு மற்றும் பொருளாதார நிலைமை குறித்த நிகர மதிப்பீடுகளின் சராசரியைக் கொண்டு மறை 100 இலிருந்து +100 வரையான அளவீட்டைக் கொண்ட 'பொருளாதார நம்பிக்கைச் சுட்டெண்' கணக்கிடப்படுகிறது. இச்சுட்டெண் 2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மறை 39 ஆக இருந்ததுடன், பிப்ரவரி 2025 இற்குப் பின்னர் நேர்மறை நிலையை அடைந்திருந்தது. எனினும், இம்முறை நடாத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் இது மறை 8 ஆகக் குறைடைந்துள்ளது.

இந்த “தேசத்தின் மனநிலை” (Mood of the Nation) கருத்தாய்வில் கேட்கப்பட்ட கேள்விகளின் திருத்தமான சொற்பிரயோகங்களும், இரண்டு தசம தானங்கள் வரையிலான பதில்களின் சதவீதங்களும் கீழே விரிவாகத் தரப்பட்டுள்ளன. சில சதவீதத்தினர் தங்களுக்குத் தெரியாது எனக் கூறியதாலோ அல்லது பதிலளிக்க மறுத்தமையாலோ, இவற்றின் கூட்டுத்தொகை 100 இற்குக் குறைவாகக் காணப்படுகின்றது.

அரசாங்கத்திற்கான மதிப்பீடு | “அங்கீகரிக்கிறேன்” 49.83% | “அங்கீகரிக்கவில்லை” 31.40% | “தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வரும் விதத்தை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா அல்லது அங்கீகரிக்கவில்லையா?” என்ற கேள்விக்கான பதிலளிப்பின் அடிப்படையில்.

பொருளாதார தொலைநோக்கு | "முன்னேறி வருகிறது" 41.63% | "மோசமடைந்து வருகிறது" 40.29% | "ஒட்டுமொத்தமாக நாட்டின் பொருளாதார நிலைமைகள் முன்னேறி வருகின்றனவா அல்லது மோசமடைந்து வருகின்றனவா என நீங்கள் கருதுகிறீர்கள்?" என்ற கேள்விக்கான பதிலளிப்பின் அடிப்படையில்.

பொருளாதார நிலை | “நல்லது” அல்லது “மிகவும் நல்லது” 38.00% | “மோசமானது” 55.59% | “இன்றைய நாட்டின் பொருளாதார நிலைமையை மிகவும் சிறந்தது, நல்லது அல்லது மோசமானது என எவ்வாறு மதிப்பிடுவீர்கள்?” என்ற கேள்விக்கான பதிலளிப்பின் அடிப்படையில்.

வெளியிடப்பட்ட பிற சமீபத்திய தேசிய கருத்தாய்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளிலிருந்து, இந்தக் கேள்விகள் வேறுபட்டிருந்தன. உதாரணமாக, “சமூகக் குறிகாட்டிகள் கருத்தாய்வானது” (Social Indicators Survey), குறிப்பிட்ட அரசியல் பிரமுகர்கள் அல்லது குழுக்கள் தொடர்பான திருப்தி குறித்துக் கேட்டதாகத் தெரிவித்ததுடன், ஜனாதிபதி மற்றும் பிரதமர் மீதான திருப்தியை முறையே 76% மற்றும் 68% எனவும், ‘ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்’ மீதான திருப்தியை 45% எனவும் பதிவிட்டிருந்தது. இதற்கு மாறாக, “தேசத்தின் மனநிலை” கருத்தாய்வானது ஒட்டுமொத்த அரசாங்கத்தின் மீதான அங்கீகாரம் பற்றிக் கேட்டிருந்ததுடன், 50% என்ற முடிவையும் பெற்றிருந்தது. இது “சமூகக் குறிகாட்டிகள் கருத்தாய்வில்” ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பாகப் பெறப்பட்ட பதிலுக்கு மிகவும் நெருக்கமானதாகும்.

கருத்துக்கணிப்பு அமுலாக்கம்:

தொடர்ச்சியாக நடாத்தப்படும் தேசத்தின் மனநிலை கருத்துக்கணிப்பானது, வெரிட்டே ரிசர்ச் நிறுவனத்தின் மக்கள் மனநிலை கருத்துக்கணிப்பு (Sentiment Survey) பொறிமுறையின் ஒரு பகுதியாகஉள்ளதுடன், அந்நிறுவனம் தொடர்ந்து வெளியிடும் பொருளாதார மற்றும் அரசியல் நிலவரம் குறித்த சுருக்கமான அறிக்கைகளுக்கு (Macro-political Briefings) மேலதிக தகவல்களை வழங்குகிறது.

இப் பொறிமுறையானது ஏனைய நிறுவனங்களும் தங்களது கருத்துக்கணிப்புக் கேள்விகளைச் சேர்த்து, இலங்கையர்களின் மனநிலையை அறிந்து கொள்ள அனுமதிக்கிறது. கருத்துக்கணிப்பு முடிவுகள் பற்றிய மேலதிக விபரங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கக் கூடியதாகவுள்ளது.

இச் சமீபத்திய கருத்துக்கணிப்பானது, ஜூலை 11 முதல் 30 வரை, தனித்தனிக் குடும்பங்களைச் சேர்ந்த 2,013 இலங்கையைச் சேர்ந்த பெரியவர்களிடம் தேசிய அளவில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட, பல கட்ட, சீரற்ற மாதிரி முறையில் நடத்தப்பட்டது.

இது 95% நம்பிக்கை மட்டத்தில் அதிகபட்சமாக ±2.21% புள்ளி (pp) மாதிரி பிழை வரம்பைக் கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமுலாக்கச் செயல்பாட்டில் ஏற்படக்கூடிய குறைபாடுகளால் இந்தப் பிழை வரம்புகளில் மேலும் மாற்றத்தை ஏற்படுத்தகூடும்.

Bootstrap