தென் கொரியாவுடனான கூட்டு இராணுவப் பயிற்சிகளை குறைக்க ட்ரம்ப் முடிவு

அமெரிக்காவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே நடைபெறும் கூட்டு இராணுவப் பயிற்சிகளை கணிசமாகக் குறைக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் தென் கொரியா அமெரிக்காவுக்கு போதிய ஆதரவு வழங்கத் தவறியதை இதற்கான காரணமாக ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது சமூக ஊடகப் பதிவில், இந்த நடவடிக்கை வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுடனான தனது நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் தென் கொரிய படைகள் ஆண்டுதோறும் பல்வேறு கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்தி வருகின்றன. இவை தமக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக வட கொரியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

இந்நிலையில், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு இடையிலான 11 நாள் ‘உல்ச்சி சுதந்திரக் கேடயம்’ கூட்டு இராணுவப் பயிற்சி நடைபெறவுள்ளது. இதில் சுமார் 18,000 தென் கொரிய வீரர்கள் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கூட்டு இராணுவப் பயிற்சிகள் உடனடியாக நிறுத்தப்படாது என்றும், எதிர்காலத்தில் அவை வரையறுக்கப்பட்ட அளவில் முன்னெடுக்கப்படும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Bootstrap