அமெரிக்க கடற்படையின் ‘யு.எஸ்.எஸ் பென்ஃபோல்ட்’ (USS Benfold) ஏவுகணை அழிப்புக் கப்பல், கடந்த ஜூலை 24 அன்று மின் உற்பத்திப் பொறிகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தென்சீனக் கடலில் 4 நாட்கள் இயங்காமல் நின்றது.
சுமார் 10,000 டன் எடையுள்ள இந்தக் கப்பலில் மின்தடை ஏற்பட்டதால், 32°C முதல் 37°C வரையிலான கடும் வெப்பத்தில் காற்றுச்சீரமைப்பி (AC), கழிப்பறைகள், சமையலறை மற்றும் குடிநீர் வசதிகள் இன்றி ஊழியர்கள் தவித்தனர்.
‘யு.எஸ்.எஸ் ராபர்ட் ஸ்மால்ஸ்’ என்ற மற்றொரு அமெரிக்க போர்க்கப்பல் சமைத்த உணவுகளை வழங்கி உதவியது. அதன்பின்னர், பிலிப்பைன்ஸின் சுபிக் பே பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டு பழுதுபார்க்கப்பட்டு, ஆகஸ்ட் 8 அன்று மீண்டும் பணிக்குத் திரும்பியது.
கப்பலில் இருந்த வீரர்களுக்குக் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. சமீபத்திய மாதங்களில் இந்தோ-பசிபிக் பகுதியில் அமெரிக்க கடற்படைக் கப்பலில் மின்தடை ஏற்பட்டது இது இரண்டாவது முறையாகும்.