மறைமுக விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்துமாறு ஷாருக் கான் உள்ளிட்ட பொலிவூட் பிரபலங்களுக்கு மஹாராஷ்டிர அரசு எச்சரிக்கை!

தடைசெய்யப்பட்ட பாக்கு (Pan Masala) உற்பத்தி நிறுவனங்களின் மறைமுக விளம்பரங்களில் நடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என முன்னணி பொலிவூட் நடிகர்களான ஷாருக் கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷெரொஃப் ஆகியோருக்கு, மஹாராஷ்டிர மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பிட்ட நடிகர்கள் 'விமல்' (Vimal) நிறுவனத்தின் ஏலக்காய் தயாரிப்பை விளம்பரப்படுத்துவது போல் நடித்திருந்தாலும், அந்த வர்த்தகநாமம் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பாக்கு தயாரிப்புகளுக்கே பெரிதும் அடையாளப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 3.50 விலையில் விற்பனை செய்யப்படும் இந்த பாக்குகள் வாய் புற்றுநோயை உருவாக்கக்கூடிய ஆபத்தானவை என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்தியாவில் இதன் வர்த்தகம் சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதி கொண்டது என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மஹாராஷ்டிர மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) வெளியிட்டுள்ள அறிவித்தலில், பின்வரும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

இத்தகைய விளம்பரங்களை நடிகர்கள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து உடனடியாக அகற்ற வேண்டும்.

இனிவரும் காலங்களில் இத்தகைய விளம்பரங்களின் ஒளிபரப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடாது.

குறிப்பிட்ட நிறுவனத்துடன் செய்யப்பட்டுள்ள ஒப்பந்த விபரங்களை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இது தொடர்பில் 15 நாட்களுக்குள் முறையான விளக்கமளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளன.

மஹாராஷ்டிர மாநிலத்தின் புதிய உணவுப் பாதுகாப்புத் திணைக்கள தலைவர், சுகாதாரச் சீர்கேடு காரணமாகப் பிரபல உணவகங்கள், பலசரக்குக் களஞ்சியங்கள் மற்றும் மெக்டொனால்ட்ஸ், டொமினோஸ் உள்ளிட்ட சர்வதேச உணவகங்களின் உரிமங்களை அண்மையில் இடைநிறுத்தி அதிரடி நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாகவே தற்போது பிரபல நடிகர்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மறைமுக விளம்பரங்கள் மூலம் நுகர்வோரை திசைதிருப்புவதைத் தடுக்கும் வகையில் இந்திய அரசு கடுமையான விதிகளை உருவாக்கி வரும் நிலையில், மஹாராஷ்டிர அரசின் இந்த நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bootstrap