தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட புதிய அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகளில் ரூ 75,000 ரூபாய் வரையிலான விவசாயிகளின் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவதாகவும், ஒரு லட்சம் வரை பயிர் கடன் பெற்றவர்களுக்கு 75,000 ரூபாய் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருக்கிறார்.

தமிழக சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை தொடர்பான கூட்டத்தொடர் நான்கு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் நடைபெற்றது.

இதில் பேரவை விதி எண் 110 கீழ் தமிழக முதலமைச்சர் விஜய் பயிர் கடன் தள்ளுபடி குறித்து தெரிவித்ததாவது,

''மக்கள் எங்கள் உயிர் என்றால் விவசாயிகள் எங்களின் உயிர் நாடி. எந்த ஒரு நாடு விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குகிறதோ...! அந்த நாடு வளமுடன் செழிப்புடன் இருக்கும்.

அதன்படி தமிழக வெற்றிக்கழக அரசு பதவியேற்ற உடன் 15 நாட்களுக்குள் குறு, சிறு விவசாயிகளுக்கான பயிர் கடன் தள்ளுபடி செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது.

பின்னர் விவசாய அமைப்புகளிடமிருந்து கருத்துக்கள் பெறப்பட்டு, பயிர் கடன் தள்ளுபடிக்கான வரம்பு உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில் பயிர் கடன் தள்ளுபடியை முழுவதுமாக வழங்க கோரிய விவசாயிகளின் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டன. அதன் படி கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறப்பட்டுள்ள விவசாயிகளின் பயிர் கடன் 75 ,000 ரூபாய் வரை முழுமையாக தள்ளுபடி செய்யப்படுகிறது.

75,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான பயிர் கடனுக்கு 75 ,000 ஆயிரம் மட்டுமே தள்ளுபடி செய்யப்படுகிறது. இதனால் கூடுதலாக இரண்டு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயனடைவார்கள். ஒரு லட்சத்திற்கும் மேல் பயிர் கடன் பெற்றவர்களுக்கு 35,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும்.‌

அரசுக்கு கடுமையான நிதிச் சுமை இருந்த போதிலும் இந்த கூடுதலான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு 954 கோடி ரூபாய் கூடுதல் சுமை ஏற்படும்'' என்றார்.

இதனைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் வருகை தரும் போது எதிர்க்கட்சி தலைவர் எழுந்து நின்று வரவேற்க வேண்டுமா? கூடாதா? என்பது குறித்தும், 'போதை இல்லா தமிழ்நாடு' சிறப்பு பிரிவை உருவாக்கியது திமுகவா? தவெக வா,? என்பது குறித்த விவாதமும் சட்டப்பேரவையில் காரசாரமாக நடைபெற்றது என்பதும், இது தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய பேச்சுக்கள் பேரவை தலைவர் எதிர்ப்பு தெரிவித்து, அவற்றை அவை குறிப்பில் இருந்து நீக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்று நூறு நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளதால் விஜய்க்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Bootstrap