இம்ரான் வழக்கில் அதிரடி திருப்பம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை குறித்து தவறான தகவல்கள் பரவி வந்த நிலையில் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அரசுக்கு அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவு தான் தற்போது பேசுபொருளாகி உள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் மீது ஊழல் உட்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சில வழக்கில் தண்டனைபெற்று இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அடியாலா தனிமைச் சிறையில் உள்ளார். இதற்கிடையே, அவர் மரணமடைந்து விட்டார் என்ற வதந்திகள் பரவி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின...இதனை பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் (MOIB) மறுத்திருந்தது...அதைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவர் உயிருடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

தற்போது, இம்ரான் கான் உடல்நிலை குறித்த செய்திகள் மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ..இதையடுத்து அவருடைய குடும்பத்தினரும், கட்சியினரும் அவரை நேரில் பார்க்க வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில்தான், நீண்டகாலத் தனிமைச் சிறைவாசம் இம்ரான் கானின் உடல்நலனைப் கடுமையாகப் பாதித்துள்ளதாகக் கூறி, அவரை மருத்துவமனைக்கு மாற்றக் கோரி அவரது தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், இம்ரான் கானை உடனடியாக, அதாவது அடுத்த 48 மணிநேரத்திற்குள் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிபா சர்வதேச மருத்துவமனைக்கு (Shifa International Hospital) மாற்றுமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி ஷாஹித் வாகித் தலைமையிலான, நீதிபதிகள் நயீம் அக்தர் ஆப்கான் மற்றும் இஷ்டியாக் இப்ராஹிம் அடங்கிய 3 உறுப்பினர்கள் கொண்ட அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும், இம்ரான் கானின் தனிப்பட்ட மருத்துவர் மற்றும் அவரது சகோதரி உஸ்மா கான் ஆகியோரை உள்ளடக்கிய சிறப்பு மருத்துவக் குழு அமைக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தவிர, பல மாதங்களாக அவருடைய குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்கள் அவரைச் சந்திக்க விதிக்கப்பட்டிருந்த கடும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, வாரம் ஒருமுறை குடும்பத்தினர் சந்திப்பதை உறுதிசெய்ய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், இம்ரான் கானின் மருத்துவ அறிக்கைகளை ஊடகங்களில் வெளியிடுவதோ அல்லது அதை அரசியல்மயமாக்குவதோ கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இம்ரான் கானை உடனடியாக மருத்துவமனைக்கு மாற்ற அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நிம்மதியை அளித்துள்ளது.

Bootstrap