மத்திய கிழக்கு உக்ரைனிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்!

ரஷ்யப் படைகள் உக்ரைனின் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்திற்குள் முன்னேறி வரும் நிலையில், அங்குள்ள 2,200 குழந்தைகள் உட்பட பொதுமக்களை வெளியேற்ற உக்ரைன் அரசு உத்தரவிட்டுள்ளது.

டினிப்ரோ நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள 16 குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பொதுமக்களை கட்டாயமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்குள் குழந்தைகளுடன் உள்ள அனைத்து குடும்பங்களும் குறித்த பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய இராணுவ நிர்வாகத் தலைவர் அலெக்சாண்டர் கொன்ஷா தெரிவித்துள்ளார்.

இதன்படி, பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் அரச நிர்வாக அதிகாரிகளின் உதவியுடன் 2,177 குழந்தைகள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

வெளியேற்றப்படும் பொதுமக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, பின்னர் பாதுகாப்பான புதிய குடியிருப்புகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியம் ரஷ்யாவின் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு தொடர்ச்சியாக இலக்காகி வருகின்றது. பிராந்தியத்தின் கிழக்குப் பகுதிகளில் மோதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், உக்ரைனில் ரஷ்யப் படையெடுப்பு ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ளது.

இந் நிலையில், ரஷ்யப் படைகளின் முன்னேற்ற வேகம் குறைந்திருந்தாலும், ஆள் பற்றாக்குறை மற்றும் இராணுவ வீரர்களின் சோர்வு காரணமாக உக்ரைன் இராணுவம் தொடர்ந்து நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த மாதம் ரஷ்ய இராணுவத்தின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை, போரின் ஆரம்பகாலத்துக்குப் பின்னர் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

 

Bootstrap