அலாஸ்கா அருகே பதிவான தொடர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திற்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அவசரக்கால மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அலாஸ்காவின் கொடியாக் நகருக்கு தென்மேற்கே 161 கிலோமீட்டர் தொலைவில், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 12:39 மணிக்கு 4.6 ரிக்டர் அளவில் இந்நிலநடுக்கம் பதிவானதாக மாகாணத்தின் 'EmergencyInfoBC' இணையதளம் தெரிவித்துள்ளது.
பூமிக்கு அடியில் 58 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கொடியாக் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிலர் நில அதிர்வை உணர்ந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆரம்பகட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில், இந்தப் பிராந்தியத்திற்கு சுனாமி ஆபத்து எதுவுமில்லை என அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
அலாஸ்கா நிலநடுக்க மையத்தின் தகவல்படி, இப்பகுதியில் ஏற்படும் சக்திவாய்ந்த நில அதிர்வுகளுக்கு 'அலூசியன் மேகாதிரஸ்ட்' சப்டக்ஷன் மண்டலமேமுக்கிய காரணமாகும்.
முன்னதாக 2020-இல் 7.8 ரிக்டர் அளவிலும், 2021-இல் 8.2 ரிக்டர் அளவிலும் பேரழிவு நிலநடுக்கங்கள் இங்கு பதிவாகியுள்ளன.
வட அமெரிக்க தட்டிற்கு அடியில் பசிபிக் தட்டு சரிந்து நழுவுவதனாலேயே இந்தப் பகுதியில் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.