கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள லனார்க் கவுண்டி (Lanark County), ஸ்மித்ஸ் பால்ஸ் (Smiths Falls) அருகே உள்ள கிராமப்புற நிலப்பகுதியில் ஒன்ராறியோ மாகாணக் பொலிஸார் (OPP) நடத்திய சோதனையில், மூன்றாவது நபரின் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் லாரன்ஸ் பெர்ட்ரிம் (Lawrence Bertrim) என்பவருடையது என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஸ்மித்ஸ் பால்ஸ் நகரின் மையப்பகுதியில் காணாமல் போனபோது அவருக்கு வயது 42. இவரது மரணம் குறித்த தகவலுக்கு $50,000 டாலர் பாரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 5, 2026 அன்று, இதே பகுதியில் ராபர்ட் லம்பேர்ட் (Robert Lambert) என்பவரின் உடற்பாகங்கள் ஜூலை மாதம் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் அறிவித்தனர்.
அக்டோபர் 2025-இல், ராபி தாம்சன் (Robbie Thomson) என்பவரின் எச்சங்கள் இதே இடத்தில் கண்டெடுக்கப்பட்டன. இந்த கொலை வழக்கில் மூன்று பேருக்கு முதல் நிலை கொலைக் குற்றம் (First-degree murder) உட்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காணாமல்போன லாரன்ஸ் பெர்ட்ரிம் மற்றும் ராபி தாம்சன் ஆகிய இருவருக்கும் இடையே தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், 2023-ஆம் ஆண்டு நெடுஞ்சாலை 15 அருகே சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட 34 வயதான ஸ்டீவன் டேட் (Steven Tate) என்பவருடனும் இவர்களுக்குத் தொடர்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது பொலிஸார் அந்தப் பகுதியில் தீவிர புலனாய்வு மேற்கொண்டு வருகின்றனர்.