தென்னிந்தியத் திரையுலகின் மூத்த பழம்பெரும் நடிகையான சௌகார் ஜானகி (94), உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
1931 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் திகதி கன்னட மொழி பேசும் குடும்பத்தில் பிறந்த சௌகார் ஜானகி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 450 க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், 300 க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார்.
இயக்குநர் எல்.வி. பிரசாத் இயக்கத்தில் வெளியான 'ஷவுகாரு' என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலமே இவர் முதன்முதலாகத் திரையுலகில் அறிமுகமானார்.
இப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்தே இவருக்கு 'சௌகார்' என்ற அடைமொழிப் பெயர் உருவானது. பின்னர் 1952 ஆம் ஆண்டு வெளியான 'வளையாபதி' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி வைத்தார்.
கன்னடத் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் டொக்டர் ராஜ்குமாருடன் இணைந்து, 1959 ஆம் ஆண்டு வெளியான இந்தியாவின் முதலாவது பேன்-இந்திய (Pan-India) கன்னடத் திரைப்படமான 'மகிஷாசுர மர்தினி'யில் இவர் நடித்திருந்தார். அந்த வகையில் இந்தியாவின் ஆரம்பகால பேன்-இந்திய நடிகைகளில் ஒருவராகவும் இவர் கருதப்படுகிறார்.
கலைத்துறைக்கு இவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பைப் பாராட்டும் வகையில், இந்திய அரசின் உயரிய விருதான 'பத்மஸ்ரீ', மற்றும் கலைமாமணி, நந்தி விருதுகள் உள்ளிட்ட பல கௌரவங்கள் இவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டன. இவரின் சகோதரியான கிருஷ்ணகுமாரியும் புகழ்பெற்ற ஒரு நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.